உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 கிலோ தங்கம் விற்று எம்.பி.,க்கு பணம் தந்தோம் ஹவாலா புரோக்கர்கள் வாக்குமூலம்

20 கிலோ தங்கம் விற்று எம்.பி.,க்கு பணம் தந்தோம் ஹவாலா புரோக்கர்கள் வாக்குமூலம்

சென்னை:'லோக்சபா தேர்தலின்போது, புதுச்சேரி பா.ஜ., - எம்.பி., செல்வகணபதிக்கு, 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாகக் கொடுத்தோம்' என, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர்கள், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்ப, சென்னை தாம்பரம் ரயில் நிலையத் தில், தேர்தல் பறக்கும் படை யினர் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் உள்ளிட்டோரிடம், 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சம்மன்

அந்த பணம் யாருடையது என்பது குறித்து, நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், பா.ஜ., அமைப்பு செயலர் கேசவவிநாயகன் உட்பட 20 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், பா.ஜ.,வைச் சேர்ந்த புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி மற்றும் ஹவாலா புரோக்கர்களான, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகிய மூவரும், அக்., 25ல், சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டது.முழங்கால் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, செல்வகணபதி வேண்டு கோள் விடுத்துள்ளார். சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகியோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:விசாரணையின்போது, சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகியோர், தங்கக் கட்டிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகக் கூறினர். அதற்கு முறையான ரசீது மற்றும் ஆவண பதிவுகள் எதையும் அவர்கள் பின்பற்றுவது இல்லை. முதலில், 1 கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்ததாக கூறினர். விசாரணையை சற்று கடுமையாக்கியதும், பா.ஜ., - எம்.பி., செல்வகணபதி, 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாக தருமாறு கூறியதாகவும், அதன்படி, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள நகை வியாபாரியிடம், 15 கிலோ தங்கக் கட்டிகளை விற்றதாக கூறினர். மீதமுள்ள, 5 கிலோ தங்கக் கட்டிகள் புதுச்சேரியில் விற்கப்பட்டுள்ளன.

ஆதாரங்கள் சிக்கின

தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்றுக் கொடுத்ததாக இருவரும் கூறுகின்றனர். தமிழக பா.ஜ., நிர்வாகி கோவர்தனின் டிரைவர் விக்னேஷிடம், சூரஜ் அடிக்கடி பேசியதற்கான ஆதாரங்களும் சிக்கி உள்ளன.சூரஜ், பங்கஜ் ஆகியோர், 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாகக் கொடுத்தது பற்றி, செல்வகணபதியிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. அப்போது தான் உண்மை தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை