உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆபத்தான குரோமிய கழிவுகளை அகற்றணும்

ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆபத்தான குரோமிய கழிவுகளை அகற்றணும்

சென்னை: 'ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்தி, நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ராணிப்பேட்டை சிப்காட்டில், 1975ம் ஆண்டில் துவங்கப்பட்ட, 'குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்' தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்கு பின், 1989ல் மூடப்பட்டது. இந்த ஆலையில், 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அது அகற்றப்படாததால், அது வேதிவினை புரிந்து நீரிலும், நிலத்திலும் கலந்து வருகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பேரழிவால், அப்பகுதியில் உள்ள, 700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் எதற்கும் பயன்படாத மலட்டுத்தன்மை கொண்டதாக மாறி விட்டன.

அதிக பாதிப்பு

இன்னொரு புறம் அங்குள்ள மக்கள் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதயநோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு காரணம், மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரிலும் குரோமியக் கழிவுகள் கலந்திருப்பதுதான் என கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன், ஆறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அப்பகுதியை சுத்திகரிக்கவும், 223.17 கோடி ரூபாயும்; நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற 11.28 கோடி ரூபாயும் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது.

வல்லுநர் கருத்து

இது தவிர, தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற, மாதம் 1.55 கோடி ரூபாய் வீதம், 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செலவழிக்க வேண்டும் என, வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதுதான் இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.எனவே, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், பெயரளவிலான திட்டங்களை செயல்படுத்தாமல், குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை, தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 26, 2025 09:30

தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள்.. சி எஸ் ஐ ஆர் மைய்ய மின்வேதியியல் ஆய்வக விஞாநியின் கருத்து. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மிகுந்த தீங்கு விளைவிக்கும் குரோமியம். இந்த உலகத்தை மின்வேதியியல் ட்ரீ ட்மெண்ட் மூலம் குரோமியம் ஆக்ஸிட் மாற்றமுடியும். இந்த குரோமியம் ஆக்ஸிடே எனாமல் பெயிண்ட் தயார்செய்யும் தொழிலுக்கு தேவையான முக்கிய கெமிக்கல் ஆகும். தமிழக அரசு கேட்டுக்கொண்டாள் பல டன் க்ரோமியும் பிரித்தெடுத்து பெயிண்ட் தொழிற்சாலைகளுக்கு விற்க முடியும். மெம்பிரான் டெக்னாலஜி கண்டுபிடுத்து பெ டென்ட் செய்துள்ளோம். இந்திய அரசு கட்டளையிட்டால் உடனடியாக ராணிப்பேட்டை சென்று இன்டெரிம் ரிப்போர்ட் அளிக்கமுடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை