உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றம் ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

போலீஸ் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றம் ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

சென்னை: 'சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவல் துறை புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்குகள் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.சென்னையில் அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.அவரது பேச்சுக்கு, ஹிந்து சமய ஆர்வலர்கள், அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர் பதவியும் பறிபோனது.இந்நிலையில், பொன்முடியின் பேச்சுகள், பெண்களை இழிவு படுத்தும் வகையிலும், சைவம் மற்றும் வைணவம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும், வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாகவும் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.அதன்படி, பொன்முடிக்கு எதிரான வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டதாவது:பொன்முடி பேச்சு தொடர்பாக, எந்த சர்ச்சையும் இல்லாத நேரத்தில், தாமாக முன்வந்து உயர் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பின், பொன்முடிக்கு எதிராக, மூன்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.அதில், அவரது பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பில் வராது என, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. பின், மாநிலம் முழுதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான், பொன்முடி குறிப்பிட்டு பேசியுள்ளாார். இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது:

முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது, காவல் துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்குவது தெரிகிறது. அப்படி செய்தால், விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்.பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும்? என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட, நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை பேசியிருக்கலாமே? இவ்வாறு நீதிபதி கூறினார். விசாரணை வரும் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை