உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனு தாக்கல்: அரசு பதிலளிக்க உத்தரவு

அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனு தாக்கல்: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, இரண்டு வாரங்களில் அரசு பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், 'பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஆறு பேர் இறந்தனர். சம்பவத்துக்கு காரணமான கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், 'அனைவரின் நலன்களையும் அரசு கவனத்தில் கொள்கிறது. விசாரணைக்குப் பின், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்' என்றார். அதற்கு, 'போலீஸ் விதிமுறைகளில் உள்ள ஐந்து நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அக்., 12 ம் தேதிக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது. இதற்கிடையில், சட்டவிரோதமாக ஜான்பாண்டியனை ஒரு நாள் வைத்ததற்காக, 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை