கல்வி உரிமை சட்டப்படியான மாணவர் சேர்க்கை பிரச்னை அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை:'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கவுரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும்' என, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான, 2025 - -2026ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை இதுவரை துவ ங்கவில்லை என, கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மத்திய அரசிடம் நிதி கிடைக்கவில்லை என கூறாமல், தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை, மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. அதை அமல்படுத்தவில்லை என, அவமதிப்பு வழக்கை ஈஸ்வரன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்கு, செப்., 7ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'கல்வியாண்டு துவங்கி, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள பக்கத்தை, இன்னும் திறக்காமல் இருப்பது ஏன்? 'மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னையில், மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மாணவர்கள் நலனை கருத்தில் வைத்து, கவுரவம் பார்க்காமல், மாணவர் சேர்க்கை இணையதள பக்கத்தை திறக்க வேண்டும்' என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''அரசுக்கு எந்த கவுரவ பிரச்னையும் இல்லை,'' என்று கூறியதை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை, செப்., 9க்கு தள்ளிவைத்தனர்.