பாரபட்சமின்றி முடிவு காவல் துறைக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை:'ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களில், பாரபட்சம் இன்றி முடிவெடுக்க வேண்டும்' என, காவல் துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், பா.ம.க., வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பா.ம.க., சார்பில், அண்ணா பல்கலை மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஜன., 2ல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறி, போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பா.ம.க., கொள்கை பரப்பு செயலர் பி.கே.சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் கமிஷனர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தி.மு.க., போராட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என, விளக்கம் அளிக்கப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''எந்த பாரபட்சமும் இல்லாமல், காவல் துறையினர் தங்கள் கடமையை செய்ய வேண்டும். விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும் முன், சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,'' என அறிவுறுத்தி, பா.ம.க., மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.