உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4.30 கோடி சுங்க வரி ஏய்ப்பு வழக்கு: விசாரணையை தொடர ஐகோர்ட் அனுமதி

ரூ.4.30 கோடி சுங்க வரி ஏய்ப்பு வழக்கு: விசாரணையை தொடர ஐகோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருவிகள் இறக்குமதி வாயிலாக, 4.30 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக, தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடர, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.உலோகங்கள் வெட்டு கருவிகள் இறக்குமதியில், 4.30 கோடி ரூபாய் அளவுக்கு, சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக, ஸ்ரீ சாய், சிவசக்தி என்டர்பிரைசஸ், நிதிஷ் டூல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.ஐ., 2014ல் வழக்கு பதிவு செய்தது.கோவை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு

இதையடுத்து, அமலாக்கத்துறை தனியாக 2015ல் வழக்கு பதிந்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஸ்ரீ சாய் என்டர்பிரைசஸ் நிறுவனர் மனோகரன், தேன்மொழி, லட்சுமி ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'நிதிஷ் டூல்ஸ் பிரைவேட் லிமிடெட் தான் இறக்குமதி செய்தது. நிறுவனம் ஒரு சட்டபூர்வமான நபர் என்பதால், நிறுவனத்தை குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்காமல், இயக்குநர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்தது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது.அமலாக்கத்துறை தரப்பில், 'பிரதான வழக்கின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு எதிராக விசாரணை துவக்கப்பட்டது. அதில், முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது' என்று, தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ், ஸ்ரீ சாய் என்டர்பிரைசஸ், நிதிஷ் டூல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு எதிராக, 2012ல் விளக்கம் கேட்டு, அமலாக்கத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பணமோசடி போன்ற பொருளாதார குற்றங்கள், மிக மோசமானவை. அவை, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்கும். இதுபோல சட்டவிரோத பணமோசடிகள், சமூகத்தையும், நாட்டையும் பெருமளவில் பாதிக்கும். எனவே, இதுபோன்ற குற்றங்கள், மிகவும் கடுமையாகவும், கூடுதல் கவனத்துடனும் கையாளப்பட வேண்டும். சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, மனுதாரர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பிரதான குற்றத்தை மனுதாரர்கள் தங்கள் நிறுவனம் வாயிலாக செய்துள்ளனர். எனவே, கோவை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முழுமை பெறவில்லை

'குற்றத்தின் வருவாய்' குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அவை நிறுவனத்தின் பெயரில் அல்ல என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை. சுங்க சட்டத்தின் கீழ் உள்ள குற்றம் என்பது, பணமோசடி குற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், இருவேறு குற்றங்களை ஒன்று போல சித்தரிக்க முற்படுகின்றனர்.மேலும், பிரதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும் என்று கூறுவது தவறு. எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடரலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !