போலீஸ் விசாரணையில் தொழிலாளி மரணம்; ஆயுள் தண்டனையை நிறுத்த டி.எஸ்.பி.,மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : துாத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் விசாரணையில் தொழிலாளி மரணமடைந்த வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதிக்க டி.எஸ்.பி.,உட்பட 4 போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. துாத்துக்குடி மேல அலங்காரத்தட்டுவை சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளி. நாட்டு வெடிகுண்டு விற்பனை வழக்கு தொடர்பாக 1999 செப்.18 ல் துாத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். விசாரணையின் போது வின்சென்ட்நாட்டு வெடிகுண்டு விற்பனை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்தார். வின்சென்டிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது வின்சென்ட் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். துாத்துக்குடி ஆர்.டி.ஓ.,விசாரித்தார். விசாரணையில் போலீசார் தாக்கியதில் வின்சென்ட் இறந்ததாக எஸ்.ஐ.,களாக இருந்த ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், போலீஸ்காரர்கள் வீரபாகு, சுப்பையா உள்ளிட்ட சில போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை துாத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.அந்நீதிமன்றம் ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், சுப்பையா, வீரபாகு உள்ளிட்ட 9 பேருக்கு தலா ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஏப்.5 ல் உத்தரவிட்டது. அப்போது ராமகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தார். தண்டனையை எதிர்த்து ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், சுப்பையா, வீரபாகு உயர்நீதிமன்றக் கிளையில்மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையில் உள்ளது. தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதிக்கக்கோரி 4 பேரும் மனு செய்தனர். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, கீழமை நீதிமன்றம் ஏப்.5 ல்தான் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசு தரப்புதான் காரணம் என கூற முடியாது. குற்றத்தின் தன்மை தீவிரமானது. தண்டனையை நிறுத்தி வைக்க ஏற்புடைய காரணமும் இல்லை. மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.