உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க அரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

 புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க அரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க, தமிழக அரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு அமர்வு இதற்கு 2023 செப்., 14ல், அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, புராதன சின்னங்கள், கோவில்களின் கட்டடங்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என, அக்டோபர், 9ல் உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்றம் அனுமதி அளித்த கட்டுமான பணிகளை தவிர, வேறு எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தது. இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை, மாநில அரசு துவக்கி உள்ளது. மூன்று மாதங்களில் அமைக்கப்படும். ''டிசம்பர், 3ம் தேதி கார்த்திகை தீபத்தையொட்டி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் என்பதால், தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்,'' எனக்கூறி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். விசாரணை மேலும் கடந்த முறை நீதிமன்றம் கோரிய விபரங்களையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள பிற புராதன கோவில்களிலும் பணிகள் மேற்கொள்ள, புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க வேண்டியது அவசியம். ஆணையம் அமைக்கும் வரை, திருவண்ணாமலை கோவிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என, ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. ஆணையம் அமைக்க, மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தை ஒட்டி, தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறை செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்னைக்கு தீட்சிதர்கள் தரப்பு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர், 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 16, 2025 06:51

திராவிடர்களின் பகுத்தறிவு பற்றி புரியாமல் இப்படி ஒரு உத்தரவு போட்டால் அவர்கள் கல்லறைகள்தான் திராவிட தேசத்தின் பிரதான அடையாளங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? அப்படியே சொன்னாலும் திராவிட பின்புலமுள்ள பல நீதியரசர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.


புதிய வீடியோ