சட்ட விரோத பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் தகவல்
மதுரை:அனுமதியற்ற, சட்ட விரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற தாக்கலான வழக்கில், 'தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்' என அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது. நாகபட்டினம் அருளரசன் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் சட்டத்திற்கு புறம்பாக பேனர்கள், அலங்கார வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள், அமைக்கப்படுகின்றன. இதற்கு அனுமதி பெற வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது. சாலைகள், நடை பாதைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஆக., 13ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,'அரசு தரப்பில் ஆக., 20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில்முருகன் ஆஜரானார். நீதிபதிகள்: புது சினிமா வெளியாகும்போது கட் - அவுட்களை வைத்து பாலாபிஷேகம் செய்கின்றனர். தவறி விழுந்தால் என்ன செய்வது? மதுரையில் அனுமதியற்ற பிளக்ஸ், பேனர்கள், கட் - அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதா என நாங்கள் ஆய்வு செய்யத் தயார். போலீஸ் கமிஷனரிடம் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள்: மதுரை விமான நிலைய பகுதியில் பலத்த காற்று வீசும் சூழல் உள்ளது. பேனர்கள் கீழே விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனுமதியற்ற பிளக்ஸ், கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அதை மாவட்ட எஸ்.பி., கண்காணிக்க வேண்டும். அரசு தரப்பு: அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. வழக்கு விசாரணை முடிக்கப்படுகிறது' என உத்தரவிட்டனர்.