திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வழக்கு: கோர்ட் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர தாக்கலான வழக்கில் மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து அமைதியின்மையை சிலர் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்துக்களின் புனிதத்தலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் பிப்.,4 ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுத்தனர்.மதுரை மாவட்டத்தில் பிப்.,3 முதல் பிப்.,4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இரு நாட்களிலும் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் பிப்.,2 ல் உத்தரவிட்டார். தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.மதுரை முருகன்,'மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வரவேண்டாம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன்,'திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிப்போரை கண்டித்து பிப்.,4 ல் அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.பிப்.,4 ல் அவசர வழக்குகளாக விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அன்றே பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதித்தது. அரசு தரப்பில் பிப்.,19 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குைடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல்துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மத்திய தொல்லியல்துறை இயக்குனர், தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இம்மனு மற்றும் சுந்தரவடிவேல், முருகன் தாக்கல் செய்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.தமிழக அரசு தரப்பு: இம்மனுக்கள் பயனற்றதாகிவிட்டன. மேலும் விசாரிக்க வேண்டியதில்லை.இவ்வழக்குகளில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்த மதுரை சரவணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்:1947 ஆக.,15 ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என வழிபாட்டுத்தலங்கள் சட்டம் (1991) கூறுகிறது. இது பாபர் மசூதி-ராமஜென்ம பூமி விவகாரத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.எந்த ஒரு வழிபாடுத்தலத்தையும் ஆய்வு செய்ய அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: சுந்தரவடிவேல், முருகனின் மனுக்கள் காலாவதியாகிவிட்டன. அம்மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. மற்றொரு மனுதாரரான ரமேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அதிகாரிகள் விரைவாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.