உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி வழக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

மோசடி வழக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'ரயில்வே வேலைக்கு போலி நியமன ஆணை வழங்கிய மோசடி வழக்கு விசாரணையை, 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட போலீசார் மீது, டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், கோபாலகிருஷ்ணன், கோபி உட்பட ஆறு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: ரயில்வே துறையில், வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று, நம்பிக்கை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 2015ல், மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தோம். புகாரின்படி, 2015 செப்., 24ல் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். இதில், போலி நியமன தேர்வு நடத்தி, பணி ஆணைகளை வழங்கி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த ஸ்ரீகாந்தன், பிரபாகரன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தீபன், பழனி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கில், இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வேல் முருகன் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, சம்பவம் நடந்து, 10 ஆண்டுகள் கடந்த பின்னும் விசாரணை முடிவடையவில்லை. விசாரணை நீதிமன்றத்தில், இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்தபோதும், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை . குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது, ஒரு சிறிய தவறு அல்ல. குற்றவியல் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரான, ஒரு தீவிர, விவரிக்க முடியாத தோல்வி. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்காமல் போய் விடக் கூடாது என்பதற்காகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தப்பி விடக்கூடாது என்பதற்காகவும், வழக்கு விசாரணை நியாயமான நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என, பல வழக்குகளில், நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதற்கு, இந்த வழக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது, காவல் துறை மற்றும் நீதித் துறை மீது, பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தீங்கிழைக்கிறது. இந்த வழக்கை பொறுத்தமட்டில், மோசடி , ஏமாற்றுதல் மற்றும் நியமன உத்தரவுகளை போலியாக தயார் செய்தல் போன்ற கடும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், விசாரணை நியாயமற்ற முறையில், நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது. கடும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் , சுதந்திரமாக நடமாடுவதும் , பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கும் சூழ்நிலையையும், இந்த நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியாது. காவல் துறையின் நடவடிக்கையின்மை, பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், கடமையில் இருந்து தவறும் அதிகாரிகள், அதற்கு பொறுப்பேற்கப்படுவர் என்பதையும், பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி, பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக முடிவில்லாமல் காத்திருக்கும் நிலை தொடரும்பட்சத்தில், சட்டத்தின் ஆட்சி நிலைத்து நிற்காது. எனவே, இந்த வழக்கில் உரிய காலத்துக்குள் விசாரணையை முடிக்க தவறியதற்காக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்த நாளான, 2015 செப்., 25 முதல் இன்று வரை, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கையை, டி.ஜி.பி., எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாயை, எட்டு வாரங்களுக்குள், வழங்க வேண்டும். இந்த தொகையை, மனுதாரர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்க வேண்டும். இழப்பீட்டை, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து, சம விகிதத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கின் விசாரணையை முடித்து, இரண்டு மாதத்துக்குள் திருவண்ணாமலை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !