வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சட்ட விரோத விடுதிகள் மூடினால் மசோதா தாக்கல் செய்து திறக்க முடியும். புல்டோசர், வெடி வைத்து தகர்ப்பது முதல் தீர்வு தரும்.
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட உத்தரவிட்டுள்ளது.வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, நேற்று வழக்குகளை விசாரித்தது.அப்போது, ஊட்டி, கொடைக்கானலில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் செயல்படுவதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை கேட்ட நீதிபதிகள், 'சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்' என்று கேள்வி எழுப்பினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீலகிரியில், 5,620 வணிக அறைகள், 575 உரிமம் பெற்ற, 'ஹோம்ஸ்டே'கள் மட்டுமே உள்ளன. இந்த நீதிமன்றத்தில், ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தரப்பில் அளித்த அறிக்கையில் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், உரிய அனுமதியின்றி, வணிக நோக்கத்துக்காக வீடுகளை மாற்றுகின்றனர். இவற்றை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரிடம் சட்ட விரோதமாக, 30,000 முதல், 40,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, ஊட்டி, கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில், மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி கமிஷனர், மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஆகியோர் இடம் பெறுவர்.மூன்று பேர் கொண்ட இக்குழு, ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து, அவை உரிய கட்டட அனுமதி பெற்று உள்ளனவா; சுற்றுலா துறை உரிமம் பெற்றுள்ளதா என்பதை, ஆய்வு செய்ய வேண்டும்.இந்த ஆய்வில் உரிய அனுமதிகளை பெறாத தங்கும் விடுதிகளுக்கு எதிராக, உடனே நடவடிக்கை எடுத்து அவற்றை மூட வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து, பொது மக்கள், சுற்றுலா பயணியர் எளிதில் புகார் தெரிவிக்க ஏதுவாக, பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத விடுதிகள் மூடினால் மசோதா தாக்கல் செய்து திறக்க முடியும். புல்டோசர், வெடி வைத்து தகர்ப்பது முதல் தீர்வு தரும்.