உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் குறித்து பொன்முடி பேச்சு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பெண்கள் குறித்து பொன்முடி பேச்சு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சைவம், வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்ட விபரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் உள்ளது. இது வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது எனக் கூறி, பொன்முடிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டு, புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து, பொன்முடிக்கு எதிராக அளித்த புகார்தாரர்களிடம், ஒப்புகை பெறப்பட்டதா?'' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''புகார்தாரர்கள் அனைவரிடமும் ஒப்புகை பெறப்பட்டு உள்ளது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி