சென்னை: 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் தாக்கல் செய்த அறிக்கையில், 'கடந்த செப்., 30ம் தேதி வரை, தமிழகத்தில் முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, 193 வழக்குகள்; புதுச்சேரியில், 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பல வழக்குகள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், தடை விதிக்கப்படாத வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகளுக்கு, விசாரணை நீதிமன்றங்கள் அதி முன்னுரிமை கொடுத்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டு பதிவுக்காக, விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாக கருதப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து விசாரிக்க வேண்டும். தேவையில்லாமல் விசாரணையை தள்ளி வைக்க, இரு தரப்பையும் அனுமதிக்க கூடாது. மேலும், உயர்நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களையும், இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ் வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும், 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.