காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: நவ., 30க்குள் அமல்படுத்த தமிழக அரசுக்கு கெடு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, மாநிலம் முழுதும் நவம்பர் 30க்குள் அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோர், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டிலை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டிலை திரும்ப தந்தால், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, சிறப்பு அமர்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், டாஸ்மாக் தரப்பில் வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் விபரம்: தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது; ஏழு மாவட்டங்களில் பகுதி அளவுக்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி உட்பட, 16 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 113.81 கோடி மது பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளன. இவற்றில், 112.02 கோடி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அதாவது, 98.09 சதவீத மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. காலி மது பாட்டில்களை திரும்ப கொடுக்காததால் உள்ள தொகை, வட்டியுடன் சேர்த்து, 19 கோடி ரூபாய். திரும்ப பெறப்பட்ட காலி மது பாட்டில்களை விற்றதில், அரசுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ்குமார், ''காலி மது பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்வது தொடர்பாக, உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சில், மூன்று நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன; மற்ற நிறுவனங்கள் காலி பாட்டில்களை திரும்ப வாங்க மறுத்து விட்டன. மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, மாநிலம் முழுதும் அமல்படுத்த அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், 'திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி, மது பாட்டில்களை நிறுவனங்கள் பெற வேண்டும். அது, அவர்களின் கடமை. பாட்டில்களை வாங்க மறுத்த நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும். காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த வழங்கிய அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. கடைசி வாய்ப்பாக, நவம்பர் 30க்குள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, தமிழகம் முழுதும் அமல்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.