வால்பாறையில் இன்று முதல் இ- - பாஸ் அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு
சென்னை: வால்பாறையில் இன்று முதல், 'இ - பாஸ்' நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு அமர்வு உத்தரவின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கு, இ- - பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து உள்ளதாக, சிறப்பு அமர்வு கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை கேட்ட நீதிபதிகள், வால்பாறையிலும் இ- - பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, வால்பாறையில் இன்று முதல் இ- - பாஸ் நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவித்தார். மேலும், அதை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வால்பாறையில், இ- - பாஸ் நடைமுறையை அமல்படுத்த துரிதமாக செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இ- - பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது குறித்து, அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ., 28க்கு தள்ளிவைத்தனர்.