உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளக்கம் அளிக்க தாமதம் வெளியுறவு துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

விளக்கம் அளிக்க தாமதம் வெளியுறவு துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை:கம்போடியா நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக வாலிபரை மீட்கக்கோரி, அவரது தாய் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய வெளியுறவு துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'வெளியுறவு துறை செயலரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்' என எச்சரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர், கம்போடியாவில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட உதவிகளை வழங்கி, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்க டேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் தர வேண்டும்' என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, 'ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கியும், மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளிக்கவில்லை' என கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் இதுபோல சிக்கியிருந்தால் இப்படி செயல்படுவீர்களா? மகனுக்கு என்னவானது என தெரியாமல், சாப்பிடவும், துாங்கவும் முடியாமல் பரிதவிக்கும் தாயை நினைத்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர். அது, பிரதமராக இருந்தாலும் சரி; சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி. இந்த விவகாரத்தை தீவிரமாக கருதி, வரும் 25ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை, வெளியுறவு அமைச்சகம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வெளியுறவுத்துறை செயலரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். இவ்வாறு நீதிபதி எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை