கொடி கம்பங்களை அகற்றாவிட்டால் கலெக்டர்கள் ஆஜராக நேரிடும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:'தமிழகம் முழுதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட, கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் கதிரவன், சித்தன் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மாவட்டத்தில் இரு இடங்களில், அ.தி.மு.க., கொடிக் கம்பங்கள் அமைக்க, அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தமிழகம் முழுதும் உள்ள, தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள, அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்' என, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து, மாவட்ட வாரியான விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தார்.அதை ஆய்வு செய்த நீதிபதி உத்தரவிட்டதாவது: அரியலுார், திருப்பத்துார், கன்னியாகுமரி உட்பட எட்டு மாவட்டங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள், 100 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளன. ஒரு சில மாவட்டங்களில், 90 சதவீதத்துக்கு மேலாகவும், கள்ளக்குறிச்சி, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், 25 சதவீதத்துக்கு குறைவாகவும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலத்தில், தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளின்போது, பொது இடங்களில் கொடிக் கம்பங்களை தற்காலிக அடிப்படையில் நிறுவ, சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம், அரசு வாடகை வசூலிக்கவில்லை. முழுமையாக கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை. அதிகாரிகளின் செயல், நீதிமன்ற அவமதிப்பு.அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜூலை 2ம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மாவட்ட கலெக்டர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.சாலையோரங்களில் நடப்படும், ஒவ்வொரு கொடிக் கம்பத்திற்கும், 1,000 ரூபாய்க்கு குறையாமல் கட்டணம் வசூலிக்க வேண்டும்.கொடிக் கம்பங்கள் நிறுவவும், அதற்கு அனுமதி அளிக்கவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இறுதி செய்து, விரைவில் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை, ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.