சாத்தனுார் அணை திறப்பு குறித்து உயர்நிலை விசாரணை அவசியம் * அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை:'முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் சாத்தனுார் அணை திறக்கப்பட்டதற்காக, தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு, சிந்திக்கும் திறனற்ற அரசு என்பது, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சாத்தனுார் அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவின்றி நள்ளிரவில் வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 1ம் தேதி பிற்பகலில் இருந்தே, சாத்தனுார் அணையிலிருந்து கணிசமான அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு இருந்தால், இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது. ஆனால், எந்த எஜமானரின் ஆணைக்காக அணையின் பொறியாளர்கள் காத்திருந்தனர் என்பது தான் தெரியவில்லை. அதாவது, 2015 ஆம் ஆண்டு நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதையே மீண்டும் மீண்டும் கூறி, தனது தோல்விகளை நியாயப்படுத்தி வந்த தி.மு.க., அரசு, இப்போது நள்ளிரவில் சாத்தனுார் அணையை திறந்துவிட்டு, அதை விட பல மடங்கு பேரழிவுக்கு காரணமாகியிருக்கிறது. ஆட்சி செய்யவே தகுதி இல்லாத கட்சி தி.மு.க., என்பது, இதனால் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்தனுார் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதில், தவறு செய்தவர்களை கண்டறிய உயர் நிலை விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.