உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வில் அரசியல்: அடக்கி வாசிக்கும் நெடுஞ்சாலை ஆணையம்

சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வில் அரசியல்: அடக்கி வாசிக்கும் நெடுஞ்சாலை ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வில் அரசியல் நடப்பதால், அதன் விபரங்களை வெளியிடாமல் அடக்கி வாசிப்பதாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 6,805 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 78 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு, ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை, 5 முதல் 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளிப்படையாக தெரிவிக்காமல், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடக்கி வாசித்து வருகிறது. இது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசும் இதை கண்டு கொள்வதில்லை. அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் அறிக்கை வெளியிடுகின்றனர். இதை தொடர்ந்து, சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. எனவே, கட்டண உயர்வை அனைவரும் அறியும்படி அறிவிக்க வேண்டும் என்பது, பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்புக்கு பின், சுங்கக் கட்டண வசூலின் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, ஏப்ரலில் மட்டுமின்றி செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் கட்டண உயர்வு நடைமுறை படுத்தப்படுகிறது. கட்டண உயர்வு என்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் மட்டும் இது அரசியலாக்கப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, மொத்தமாக வெளியிட இயலாத சூழல் நிலவுகிறது. அதேநேரம், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களில், இது தொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரும் காலங்களில் நிலைமை சரியானால், கட்டண உயர்வு பட்டியல், முறைப்படி வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தஞ்சை மன்னர்
செப் 02, 2025 13:57

பின்னே அரசியில் செய்யாமல் அவியலா செய்வார்கள்? அது போக, எந்த அரசியல் வியாதிகள் சுங்க கட்டணம் செலுத்துகிறார்கள்...? கோ வணம் கட்டும் இடத்தில் கொடி...


புதிய வீடியோ