கதகளி, பரதநாட்டியம் கண்டு மெய்சிலிர்த்த ஹிலாரி கிளிண்டன்
சென்னை: 'தென்னிந்திய பாரம்பரிய நடனங்களை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பேசினார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பெசன்ட் நகர் கலாசேத்ரா நடனப் பள்ளிக்கு சென்றார். அவரை, கலாசேத்ரா தலைவர் லீலா சாந்தன் வரவேற்று, நடனப்பள்ளி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அங்கு நடந்த கதகளி, பரதநாட்டியம் இசை நிகழ்ச்சிகளை, ஹிலாரி கிளிண்டன், 15 நிமிடங்கள் கண்டுகளித்தார். அதன்பின் அவர் பேசும்போது,''தென்னிந்திய பாரம்பரிய நடனங்களை இவ்வளவு அருகிலிருந்து பார்ப்பது இதுவே முதல்முறை. பரதநாட்டிய கலைஞர்களின் ஒவ்வொரு அங்கமும் நடனமாடியதை கண்டு மெய்சிலிர்த்து போனேன். கதகளி, பரதநாட்டிய கலைஞர்களுக்கு இணையாக, வாய்ப்பாட்டு கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்,'' என்றார்.