விநாயகர் சிலையை இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும்: ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பூர் : “விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். திருப்பூரில், அவர் நேற்று கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பில், 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்தாண்டு இதை அதிகப்படுத்த இருக்கிறோம். சென்னையில் 5,500 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவில், திருப்பூரில் பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன், கோவையில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பர். விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து அழைத்து வருகிறோம். இம்முறை திருப்பூருக்கு வருமாறு அவரை அழைக்கிறோம். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது போல, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் வர வேண்டும். மேலும், ரம்ஜானுக்கு அரிசி கொடுப்பது போல, விநாயகர் சதுர்த்திக்கு வீடுதோறும் சிறிய விநாயகர் சிலையை, தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் எனவும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.