உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிய ஊர்க்காவல் படையினர் வழக்கு தள்ளுபடி

குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிய ஊர்க்காவல் படையினர் வழக்கு தள்ளுபடி

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு: ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்களில் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள், தங்கள் பணியை நிரந்தரம் செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

30 நாட்கள் பணி

அதை விசாரித்த நீதிமன்றம், 'அவர்களுக்கு மாதத்தில், 30 நாட்கள் பணி வழங்கி, போலீசாரின் ஊதியத்தில் குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க, மாநில அரசு பரிசீலிக்கலாம்' என்று உத்தரவிட்டது.இதை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற, மத்திய அரசும் உத்தரவிட்டது. கடந்த 2019ல் தமிழக அரசு, ஊர்க்காவல் படையினருக்கு மாதம் ஐந்து நாட்கள் பணி என்பதை, 10 நாட்களாக உயர்த்தியது.நான்கு மணி நேர பணிக்கு 280 ரூபாய், எட்டு மணி நேர பணிக்கு 560 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்குகின்றனர். மாதம் ஐந்து நாட்கள் பணி என்ற அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். மாதம், 30 நாட்கள் பணி வழங்க கூடுதல் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீதர் ஆஜராகி, ''பிற மாநிலங்களில், மாதம் முழுதும் பணி வழங்குவது தெரிந்தும், தமிழகத்தில் ஆண்டுக்கு, 60 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இது, 100 நாட்கள் வேலை திட்டத்தை விட குறைவான நாட்களாக உள்ளது,'' என, வாதிட்டார்.இதற்கு, ஊர்க்காவல் படை கூடுதல் டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஊர்க்காவல் படைக்கு வேலைக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.'ஊர்க்காவல் படை ஊதியம் என்பது, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் 1,721 இடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்ட நோக்கமே வீணாகி விடும். தமிழகத்தில், 15,622 ஊர்க்காவல் படை பணியிடங்கள் உள்ளன. 'பலர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களை நிரப்ப கூடுதல் டி.ஜி.பி., நடவடிக்கை எடுத்துள்ளார்' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி