உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது எப்படி

மதுரையில் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது எப்படி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நேற்றுமுன்தினம் ரூ.3.80 கோடி ஹவாலா பணத்துடன் வந்தவர்கள் போலீசில் சிக்கியது எப்படி என்ற விபரம் தெரியவந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் அடுத்துள்ள தெற்காவணி மூல வீதி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நகை கடைகளும், பட்டறைகளும் அதிகம் உள்ளன. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மிஷின் கட்டிங்கில் தயாரிக்கப்படும் நகை மாடல்களுக்கு 'டிமாண்ட்' அதிகம் என்பதால் அதற்கென உள்ள புரோக்கர்கள் நேரடியாக பில் இல்லாமல் விற்றுச்செல்கின்றனர். வரி கட்டாமல் இருக்க நகை விற்றதற்கான தொகையை ரொக்கமாக பெறுவது வழக்கம். நேற்றுமுன்தினம் மீனாட்சி அம்மன் கோயில் அருகே மல்டி லெவல் பார்க்கிங் இடத்தில் இரவு 7:00 மணிக்கு ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சில பைகளை வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர். இதை கவனித்த தனியார் செக்யூரிட்டி ஆகாஷ் பிலிப்ஸ் என்பவர், சந்தேகப்பட்டு போலீசிற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்த விசாரித்த போது தெற்காவணி மூலவீதியில் பாலாஜி கோல்டு டெஸ்டிங் கம்பெனி நடத்தும் பாபுராவ் 38, அவரது ஊழியர் பிரதமேஷ் 25, ஆகியோரும், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விட்டல் 30, அக் ஷய் 30, விஜய் 32, ஆகியோரும் ரூ.3.80 கோடியை 5 பைகளில் காரில் வைத்திருந்தது தெரிந்தது. நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணம் என தெரிவித்தனர். அதற்கான ஆதாரம் இல்லாததால் நேற்று அதிகாலை 3:30 மணி வரை அவர்களிடம் போலீசாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுச்செல்லுமாறு அனுப்பி வைத்தனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் 5 பேரும் ஆஜராகி விளக்கமளிக்க விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 21:26

70 சதவீத வாடிக்கையாளர்கள் நகை வாங்கும் போது பில் வேண்டாமே. வரியில்லாம கொடுங்க எனக் கேட்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஊழலை பெரும் தவறாக நினைக்காமல் ஊழல்வாதிகளுக்கே வாக்களிக்கின்றனர். இனம் இனத்துடன்.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 21:23

சட்டபடி இதற்கான வரியும் அபராதமும் செலுத்திவிட்டு மீதியை எடுத்துச் செல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை