குழந்தைகளை வாசிக்க வைப்பது எப்படி?
''நீங்கள் குழந்தைகளாக மாறாத வரை, அவர்களின் உலகத்துக்குள் நுழையவே முடியாது. அவர்களின் உலகம், வண்ணங்களால் ஆனது. கற்பனை விரியும் அந்த உலகத்தை அர்த்தம் உள்ளதாக்க, புத்தகங்கள் மட்டுமே கை கொடுக்கும்,'' என, விளக்குகிறார் அரசுப்பள்ளி ஆசிரியர் சக்திவேல். மொழி முக்கியம்
குழந்தைகளின் மொழியை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் அல்லது பிறமொழி எதுவாக இருந்தாலும், அவர்களின் விருப்ப மொழியில் மட்டுமே, புத்தகங்களை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கிலமே வாசிக்கத் தெரியாத குழந்தையிடம், புத்தகம் படித்து கற்றுக்கொள்ள வலியுறுத்தினால், வாசிப்பின் லயிப்பை உணர மாட்டார்கள். முதலில் விருப்ப மொழி புத்தகத்தை கொடுத்து, வாசிப்பின் அனுபவத்தை பெற்ற பிறகு, பிற மொழி புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். கலர் புல் பக்கம்
குழந்தைகளை ஈர்ப்பதே, கலர் புல் பக்கங்கள் தான். அதிக படங்கள், குறைவான வார்த்தைகள் கொண்ட புத்தகங்கள் கொடுக்க வேண்டும். குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகமாக இருந்தால், இன்னும் சிறப்பு. ஒரு புத்தகத்தையே படித்து முடித்து விட்டாயே என பாராட்டினால், அவர்கள் வாசிப்பு உலகம் நீளும். கற்பனை கதைகள்
கதை சொல்வதும், கேட்பதும், படிப்பதும் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று. விலங்குகள், பறவைகள், பஞ்ச தந்திர கதைகள், தெனாலிராமன் கதைகளை அறிமுகப்படுத்தலாம். இதுபோன்ற கதைகளில், கதாபாத்திரங்களுடன் குழந்தைகளும் மனதுக்குள் பேசுவர். எல்லா கதைகளிலும் ஒரு நீதி போதனை இருக்கும். பொய் சொல்லக்கூடாதென ஆயிரம் முறை சொல்வதை விட, ஒரு கதையை படித்தால் மனதில் பதித்து கொள்வர். பேசும் திறன்
படித்த கதையை பேச வையுங்கள். கதை சொல்லும்போது, குழந்தைகளின் வார்த்தைகளை சுயமாக பயன்படுத்த கற்றுக்கொள்வர். முகபாவனையோடு, குழந்தைகளிடம் கதை கேட்க யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் எல்லாரும் அமர்ந்து, உங்கள் குழந்தையை கதை சொல்ல வைத்து பாராட்டுங்கள். ஒரு புத்தகம் படித்தால், ஒரு பரிசு என கொடுத்து பாருங்கள்.வீட்டில் குட்டி 'லைப்ரரி' உருவாகி விடும்.