| ADDED : ஆக 18, 2011 08:18 AM
கோவை: ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஊழலுக்கு எதிரான அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோவையில் 19ம் தேதி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஐந்தாவது தூண் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து, அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த், இயக்குநர் ராஜ்குமார் வேலு, புரவலர் மோகன் சங்கர் ஆகியோர் கூறியதாவது: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை அறிந்ததும், 16ம் தேதி இதர அமைப்புகளுடன் இணைந்து ஐந்தாவது தூண் அமைப்பினரும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும் வலுவான ஜன் லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டு, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் வரை நமது முயற்சிகள் தொடர வேண்டும். எனவே 19ம் தேதி அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். மேலும் பல தொடர் நடவடிக்கைகளும் அறிவிக்கப்படும்.அன்னா ஹசாரே அமைதியான வழியில் தனது எதிர்பபை வெளிப்படுத்த அனுமதிக்காமல் அவரை திகார் சிறையில் அடைத்த அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து, ஐந்தாவது தூண் ஏற்பாடு செய்திருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், பெண்கள் சுயநிதி குழுக்கள் மற்றும் அனைத்து சமூக அமைப்புகள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்.உண்ணாவிரதத்தில் பங்கேற்க விரும்புவோர் 19ம் தேதி காலை 8 மணிக்கு கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன் கூடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.