டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என தமிழக பாஜ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.கோவையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தேஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் காரணம் என்று எதை வைத்து தினகரன் சொல்கிறார் என்று தெரியவில்லை. கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்கு தெரியாது. பாஜ கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் எல்லா இடத்திலும் பேசி இருக்கிறேன்.எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணியில் இருந்தோம். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செங்கோட்டையன் கூறியது குறித்து நாம் எப்படி கருத்து சொல்ல முடியும். பாஜ என்றைக்கு அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாது. டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் சொல்லி வைத்துக் கொண்டு மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறார்களா? என தெரியவில்லை. நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்பவன் இல்லை. அதிமுக ஒன்றுபடுவதே பாஜவின் விருப்பம். துக்கடா கட்சி என அமமுகவை நான் நினைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என விரும்பினோம். டிடிவி தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.