உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் புகார்களை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலையில் ஏனிந்த அவலம்

ஊழல் புகார்களை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலையில் ஏனிந்த அவலம்

கோவை : பாரதியார் பல்கலையில் பல்வேறு ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில்,பல ஆண்டுகள் ஆகியும்,அவற்றில் தீர்வு காணப்படவில்லை.கோவை பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 133 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. பல்கலையில், 39 துறைகள், 54 முதுநிலை கல்வி, எம்.பில்., பி.எச்டி., கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பல்கலையில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர் படிக்கின்றனர்.சிறந்த கல்வியாளர்களால் கட்டமைக்கப்பட்டு, திறமைமிக்க துணைவேந்தர்களால், வளர்க்கப்பட்ட பாரம்பரிய பெருமை மிக்க பாரதியார் பல்கலை, இன்று தனது பொலிவை இழந்து வருகிறது.பல்கலையில் பல்வேறு கட்டங்களில், பல ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊழல்கள் குறித்து, இன்று வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஊழலில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை. இது ஒருபுறம் இருக்க, ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த, ஊழல் புகார்களில் தொடர்புடைய பலரும், தற்போது ஓய்வு பெற்று விட்டனர்.பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஏராளமான முறைகேடுகள் விசாரிக்கப்படாமல், அப்படியே உள்ளன. இம்முறைகேடுகள் வாயிலாக, பல்கலையின் பல லட்சம் ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.ஊழல் செய்தவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி, சுதந்திரமாக செயல்படுகின்றனர். பலர் பணிமுடிந்து ஓய்வும் பெற்று விட்டனர். பல்கலையின் மாண்பு, இதன் வாயிலாக முற்றிலும் குலைந்துள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைதியாக உள்ளது. மாணவர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட பல்கலை, இன்று ஊழல் கூடாரமாக மாறியுள்ளது. புகாருக்குள்ளான பலரும் இன்று முக்கிய பொறுப்புகளில் இருப்பது தான், இதில் வேதனைக்குரிய விஷயம்' என்றார்.தமிழக உயர்கல்வித்துறை செயலர் சமயமூர்த்தியிடம் கேட்டதற்கு, ''புகார்களுக்கு உள்ளான சம்பவங்கள், பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவை. அவற்றின் விசாரணை, பல இடங்களில் தேங்கி நிற்கின்றன. விசாரணையை துரிதப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.நடவடிக்கை எடுத்தால் சரி!

வகை வகையாக ஊழல்

2014 - 15ம் ஆண்டில், மகளிர் தினத்துக்காக மகளிருக்கு புடவை வாங்கிய வகையில், ரூ.4.22 லட்சம் மோசடி, 2015ம் ஆண்டு, 150 டன் விடைத்தாள் விற்பனை செய்ததில், ரூ.17 லட்சம் முறைகேடு, மூலிகைப் பண்ணையில் ஒரே நர்சரியில் மரக்கன்றுகள் பெற்றது, ரூசா நிதியின் வாயிலாக 2022ம் ஆண்டில், ரூசா ஆய்வகத்துக்கு, ரூ 2.52 கோடியில் கருவி வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றே தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி