உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் முதலாவது புல்லட் ரயில் தயாரிப்பில் கைகோர்க்கிறது ஐ.சி.எப்.,

நாட்டின் முதலாவது புல்லட் ரயில் தயாரிப்பில் கைகோர்க்கிறது ஐ.சி.எப்.,

சென்னை:நாட்டிலேயே முதல் முறையாக மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலை, பி.இ.எம்.எல்., மற்றும் ஐ.சி.எப்., இணைந்து தயாரிக்க உள்ளது.'வந்தே பாரத்' ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், ரயில் பாதையில் அதிக வளைவுகள் போன்ற காரணங்களால், தற்போது, 130 கி.மீ., வேகத்தில் தான் செல்கின்றன. அடுத்த கட்டமாக மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், பெங்களூரில் செயல்படும் பி.இ.எம்.எல்., நிறுவனத்துடன், சென்னையில் உள்ள ஐ.சி.எப்., நிறுவனம் இணைந்து, இந்த அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளது.இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் அதிக வேக ரயில்களின் தேவை அதிகரித்து வருகிறது. அத்தகைய ரயில்களை தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், மஹாராஷ்டிராவின் மும்பை -- குஜராத்தின் ஆமதாபாத் இடையே, முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.குஜராத்தில், 353 கி.மீ., துாரம், மஹாராஷ்டிராவில், 156 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2026ல் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பிரத்யேக பாதை என்பதால், ரயிலை வேகமாக இயக்குவதில் பெரிய தடை இருக்காது. இந்த தடத்தில் மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில் ரயில் ஓடும்.இந்த ரயிலை பி.இ.எம்.எல்., நிறுவனத்துடன் இணைந்து, ஐ.சி.எப்., தயாரிக்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு தயாராக உள்ளது.விரைவில் முதல் அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளோம். 12 பெட்டிகள் மட்டுமே இருக்கும். அனைத்து பெட்டிகளும், 'ஏசி' வசதிகளுடன் சொகுசு பெட்டிகளாக இருக்கும்.பயணியருக்கான அனைத்து வசதிகளும், மேம்படுத்தப்பட்ட தரத்தில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !