உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆவேசம்

முதல்வர் ஸ்டாலினுக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆவேசம்

சென்னை:''சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல் படுகிறார்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:சட்டசபையில் எதிர்க்கட்சி முன்வைக்கிற கோரிக்கையை நிராகரித்து, எங்களை பேச அனுமதிக்காமல், வேறு கட்சி தலைவரை சபாநாயகர் பேச வைப்பது, எந்த விதத்தில் நியாயம்; சட்டசபையில் சபை முன்னவர் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய பிறகே, நான் பேச வாய்ப்பு கொடுத்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்.கடந்த, 2023 முதல், கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இம்மாதம், 1ம் தேதி, காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து, எங்கள் கட்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் பேசினார். அவர் பேசியது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கடந்த மாதம், 26ம் தேதி, திருச்செந்துார், ராமேஸ்வரம் கோவில்களில் கூட்ட நெரிசலில் பக்தர் இறந்தது குறித்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதும், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுகிறபோது, நேரலையில் ஒளிபரப்பு செய்கின்றனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் பேசினால் செய்வதில்லை. இதைத்தான் எதிர்க்கிறோம்.எங்கள் கட்சி உறுப்பினர் கேள்விக்கு, அமைச்சர் பதில் அளிப்பதை மட்டும் ஒளிபரப்புகின்றனர். என்ன கேள்வி கேட்டோம் என்பது தெரிய வேண்டாமா?

விமர்சிக்கிறார்

சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும்' என்று உறுதி அளித்தனர்; நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. 'டாஸ்மாக்' நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, எங்களை வெளியேற்றி விட்டனர். அதன்பின், முதல்வர் பேச சபாநாயகர் அனுமதி வழங்குகிறார்.முதல்வர் பேசுகிற போது, எங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அது, சட்டசபை குறிப்பில் பதிவாகிறது. ஆனால், மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதை, சபை குறிப்பில் பதிவு செய்வதில்லை. சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றனர். முதல்வருக்கு தில், திராணி, தெம்பு இருந்தால், எங்களுக்கு பேச வாய்ப்பளித்து, அதற்குரிய பதிலை பதிவு செய்தால் வரவேற்போம். கோழைத்தனமாக எங்களை வெளியேற்றி விட்டு, வேண்டுமென்றே எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்கிறார்.எங்கள் உரிமையை பறிக்கிற போது, அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, தி.மு.க.,வினர் எத்தனை முறை வெளிநடப்பு செய்தனர். அப்போது, நாங்கள் கிண்டல் செய்யவில்லை. அவர்களை மதித்தோம்.இன்னும் ஒன்பது மாதம் தான் பதவிக்காலம். அதன்பின், எதிர்க்கட்சியாக வர கூட வாய்ப்பு இல்லாமல் போகப் போகிறது. மக்கள் பிரச்னையை பேச, முதல்வருக்கு நேரமில்லை.'காவி உடை அணிந்து வரவில்லையே' என, எங்களை பார்த்து கேட்கிறார் முதல்வர். இதை ஸ்டாலின் பேசலாமா? 1999 லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டீர்கள். அவர் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பிரதமர் வருகைக்கு எதிராக, கருப்பு பலுான் பறக்க விட்டீர்கள். ஆளும் கட்சியாக வந்ததும், பிரதமருக்கு வெண்குடை பிடித்தீர்கள். நீங்கள் வீரம் குறித்து பேசலாமா?

அடிமை சாசனம்

எங்களை பொறுத்தவரை வேண்டுமானால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். அதுதான் எங்கள் நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளை அடிமையாக வைத்திருக்க மாட்டோம். ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே வளரும். தி.மு.க., கூட்டணி கட்சிகள், அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளன. காலப்போக்கில் அந்த கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்து விடும். சட்டசபையில், எங்கள் உரிமையை சபாநாயகர் பறிக்கிறார். மக்கள் பிரச்னைகளை பேச சட்டசபைக்கு வருகிறோம். ஆனால், எங்களை வேண்டுமென்று திட்டமிட்டு, பேச அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ