உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளுக்கு மம்ப்ஸ் பாதித்தால் ஆண் மலட்டு தன்மை ஏற்படலாம்

குழந்தைகளுக்கு மம்ப்ஸ் பாதித்தால் ஆண் மலட்டு தன்மை ஏற்படலாம்

சென்னை : 'குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி என்ற, 'மம்ப்ஸ்' பாதிக்காமல் தற்காத்துக் கொள்ளுங்கள். பாதிப்பு இருந்தால் அலட்சியம் காட்டாதீர்' என, அரசு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.வெயில் காலத்தில் பரவும், மம்ப்ஸ் என்ற பொன்னுக்கு வீங்கி நோய், மழை மற்றும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய், காற்றில் வேகமாக பரவக்கூடியது. தற்போது, தட்பவெப்ப நிலை மாற்றத்தால், ஆண்டு முழுதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக மாறியுள்ளது.அதீத காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப் பகுதி வலி, பசியின்மை போன்றவை அறிகுறிகள். முக்கியமாக கன்னத்தின் கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ, இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும். இந்நிலையில், மம்ப்ஸ் பாதித்த குழந்தைகளில், சிலருக்கு வளர் பருவத்தில் ஆண் மலட்டு தன்மை ஏற்படலாம் என, அரசு டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

ஓய்வு தேவை

இதுகுறித்து, சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:மம்ப்ஸ் நோய் தொற்று ஏற்பட்டு, 12 முதல், 25 நாட்களுக்குள் நோய்க்கான அறிகுறிகள் தென்படலாம். இந்நோய் பாதித்தவர்கள், ஐந்து நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்வதால், இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். பெரும்பான்மையினருக்கு சாதாரண காய்ச்சலாக இருந்து, ஓரிரு வாரங்களில் முற்றிலும் குணமாகி விடும்.இப்பாதிப்புக்கு நல்ல ஓய்வும், தனிமைப்படுத்துதலும் தேவை. காய்ச்சலை குறைக்க பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். டாக்டர் பரிந்துரையில், வலி நிவாரணி மாத்திரையும் சாப்பிடலாம்.வீக்கம் ஏற்பட்ட இடத்தில், ஐஸ் கட்டி அல்லது வெந்நீர் ஒத்தடம் செய்யலாம். இது வலியை குறைத்து சற்று இதம் தரும். கஞ்சி, மோர், பழச்சாறு, கூழ் போன்ற திரவ உணவுடன், அதிகளவு நீர் பருக வேண்டும். அமில பழச்சாறுகளான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை தவிர்த்தல் நலம்.இந்நோய், சிலருக்கு கணையத்தை தாக்கினால், அதீத வயிற்று வலி ஏற்படுத்தும். பெண் குழந்தைகளின் சினைப்பையை தாக்கி, அழற்சியை ஏற்படுத்தலாம். அடிவயிற்றுப் பகுதியில் தீவிர வலி இருக்கும்.

தடுப்பூசி

ஆண்களில் விந்தணு உற்பத்திக்கு உதவும் விரைகளில் அழற்சியை ஏற்படுத்தி, விதைப்பையில் வலியை ஏற்படுத்தும். பிற்காலத்தில் விந்தணு உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்தி, ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம் என, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஒரு சிலருக்கு இவ்வகையான பாதிப்பு ஏற்படும். இந்நோய் வராமல் தடுக்க, 'மீசில்ஸ் மம்ப்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது.அதேநேரம், இணை நோயாளிகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். திரவ உணவு கூட உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !