உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்ட கல்லுாரிகளை மூடுவதே நல்லது

ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்ட கல்லுாரிகளை மூடுவதே நல்லது

சென்னை:'அரசு சட்ட கல்லுாரிகளில் நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால், கல்லுாரிகளை மூடி விடலாம்' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக சட்ட துறை செயலர், வரும் 15ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, 2018ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மனு தாக்கல்

ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்ட கல்லுாரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில், 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணிஇடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளன' என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசு சட்ட கல்லுாரிகளில், அதிக காலிப் பணியிடங்கள் இருப்பது விசித்திரமானது மட்டுமல்ல, துரதிருஷ்டவசமானது. அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு முறையான சட்ட கல்வியை வழங்க முடியும் என எதிர்பார்க்க முடியாது.இது உன்னதமான சட்ட தொழிலை படித்து, வழக்கறிஞராக விரும்பும் எதிர்கால தலைமுறையை அழித்து விடும்.

பாழாக்கி விடும்

முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியவில்லை என்றால், சட்ட கல்லுாரிகளை மூடி விடுவது நல்லது. தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் வாயிலாக பாடம் நடத்துவது என்பது, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும்; அதை ஏற்க முடியாது.அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை, குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசின் சட்ட துறை செயலர், வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S Regurathi Pandian
அக் 26, 2024 15:55

ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை மூடிவிடுங்கள். மருத்துவமனையில் சுகாதாரத்தை பேண முடியாவிட்டால் மருத்துவமனையை மூடிவிடுங்கள். - இதற்கா ஐயா நீதிமன்றம்? நீதிமன்றங்களில் வழக்கு தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளாவிட்டால் நீதிமன்றங்களை முடிவிடவா கூறுவீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை