வருவாய் இருந்தால் அணையை துார் வாருவோம்: அமைச்சர்
சென்னை: ''எந்த அணையாக இருந்தாலும், அரசுக்கு வருவாய் இருக்குமானால், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். மதுரை மாவட்டம், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், அங்குள்ள தேனுார் கால்வாய் மற்றும் சாத்தையாறு அணையை துார்வாருவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு, அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்:சோழவந்தான் தொகுதி தேனுார் கால்வாய் முகப்பின் அருகில், வைகை ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணையை சீர்செய்து, தேனுார் கால்வாயை துார்வாருவதற்கு, 29.6 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. அரசின் நிதி ஆதாரத்தை பொறுத்து, எதிர்வரும் ஆண்டுகளில் முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளப்படும். சாத்தையாறு அணையில் நீர்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மொத்த கொள்ளவில், 27.4 சதவீதம் மண்படிவு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர் அணைகளில் வருவாயை ஈட்டும் அடிப்படையில், துார்வார விரிவான திட்ட அறிக்கை, 'வேப்காஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் உட்பட அனைத்து சட்டப்பூர்வ அனுமதி பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம், செயலாக்கம் செய்யப்பட்டு, அதன் பயன்பாடு மற்றும் விளைவுகள் விரிவாக ஆராயப்படும். அதன் அடிப்படையில், மற்ற அணைகளிலும் துார்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது சாத்தையாறு அணையும் துார்வாரப்படும். இந்த அணை மட்டுமல்ல, எந்த அணையாக இருந்தாலும், அரசுக்கு வருவாய் இருக்குமானால், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.