உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வானுார் கல்குவாரியில் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் நால்வர் கைது முன்விரோதத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம்

வானுார் கல்குவாரியில் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் நால்வர் கைது முன்விரோதத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம்

வானுார் : ''துக்க நிகழ்ச்சி வீட்டில் எங்களை தாக்கியதால், கொத்தனாரை அடித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி, மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசினோம்'' என, கைது செய்யப்பட்ட நால்வரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி தண்ணீரில் கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. வானுார் போலீசார் வழக்குப் பதிந்தனர். தலை இல்லாததால் இறந்தவர் யார் என கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.கொலை செய்யப்பட்ட நபரின் மார்பில் கஸ்துாரி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து, தனிப்படை போலீசார் விசாரணையை துவக்கினர்.

கண்டுபிடித்து எப்படி

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு, தனது மகனை காணவில்லை என திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதன்பேரில், தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.அதில், கிளியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கொந்தமூரில் பெண்ணை கற்பழித்த வழக்கில், திருவெண்ணெய்நல்லுார் சரவணப்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் ராஜதுரை,32; என்பவர், சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார். கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளியனூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டதும், அதன் பிறகு அவர் காணாமல் போனதும் தெரிய வந்தது.சென்னையில் இருந்த ராஜதுரை மனைவி முனியம்மாளை வரவழைத்து விசாரித்தனர். அவர், தனது கணவர் மார்பில் கஸ்துாரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்ததை உறுதி செய்தார்.அதன் பிறகு ராஜ துரையை மொபைல் போனில் தொடர்பு கொண்ட சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் முன் விரோதம் காரணமாக அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.கொலை தொடர்பாக திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுாரை சேர்ந்த சிவா, 22; மோகன்ராஜ், சரவணப்பாக்கம் உதயா, 25; புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக்,22, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கற்பழிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ராஜதுரை, கடந்த செப்.26ம் தேதி, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, சிவா, உதயா, மோகன்ராஜ் தரப்பினருக்கும் ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜதுரை, அனைவரின் முன்னிலையில் அவர்களை தாக்கியுள்ளார். அதனால் அவர்கள், ராஜதுரை மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.கடந்த 12ம் தேதி, சமரசம் பேசலாம் என கூறி, உதயா தரப்பினர், தடுத்தாட்கொண்டூர் ஏரிக்கரைக்கு ராஜதுரையை வரவழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்தியபோது, ராஜதுரையை தடியால் தாக்கி விட்டு சென்றுள்ளனர். மறுநாள் வந்து பார்த்த போது அவர் இறந்திருந்தார். உடலை அதே பகுதியில் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புதுச்சேரிக்கு சென்று விட்டனர்.பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை வெட்டி, இரு பாலித்தீன் பைகளில் கட்டி திருவக்கரையில் உள்ள கல்குவாரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இதற்கு, புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த நண்பர் கார்த்திக், 22; என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருகின்றனர்.

ஸ்கூபா டைவிங் முயற்சி வீண்

கைது செய்யப்பட்ட நால்வரில், மூவரை, கல்குவாரிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள், ராஜதுரையின் தலை, கை, கால்களை வெட்டி மூட்டையில் வீசிய இடத்தை காட்டினர்.அதையடுத்து, சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் குழுவினர் மூவரை வரவழைத்து, நேற்று மாலை 3;00 மணிக்கு, கல்குவாரியில் இறங்கி தேடிப்பார்த்தனர்.குவாரி நீரில் 15 அடி ஆழத்திற்கு, 10 முறைக்கு மேல் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால், உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. கல்குவாரிக்குள் சேறும், கருப்புநிறத்தில் தண்ணீரும் இருப்பதால், உடல் பாகங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.கைது செய்யப்பட்ட நபர்களை, கொலை சம்பவம் நடந்த ஏரிக்கரை பகுதிக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு, கொலை சம்பவம் குறித்து கொலையாளிகள் நடித்து காட்டியதை வீடியோ பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த ராஜதுரையின் ஆடை, தலைமுடிகளை போலீசார் சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை