பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் ஊக்கத்தொகை அமைச்சர் தகவல்
சென்னை:'பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு, அரசு அறிவித்த 3 ரூபாய் ஊக்கத் தொகை நேரடியாக செலுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் கடந்த 2019 - 20ம் ஆண்டில், 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, 7 லட்சம் லிட்டர் அதிகரித்து, தற்போது தினசரி 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது.தமிழக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நலச் சங்கங்கள் கோரிக்கையின்படி, மாவட்ட ஒன்றியத்தில் இருந்து, பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு, அரசு அறிவித்த, 3 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வழியாக, இப்பணி இந்த வாரம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.