உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு; வாரிய வசூல் ரூ.58,285 கோடி

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு; வாரிய வசூல் ரூ.58,285 கோடி

சென்னை : தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 - 20ல், 3.75 கோடி நுகர்வோர், 18,448 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நிலையில், 2024 - 25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் செலுத்தியுள்ளனர். மின் கட்டண வசூல் மையம், அரசு 'இ - சேவை' மையம், சில அஞ்சல் நிலையங்களில், ரொக்கம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றாக மின் கட்டணம் செலுத்தலாம். இது தவிர, மின் வாரிய இணையதளம், மொபைல் போன் செயலி, 'கூகுள் பே, பேடிஎம்' போன்றவற்றை உள்ளடக்கிய, 'பாரத் பில் பே' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையிலும் செலுத்தலாம்.தமிழகம் முழுதும் உள்ள 3.44 கோடி மின் நுகர்வோர்களில், வீடுகளின் எண்ணிக்கை, 2.45 கோடி. வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. எனவே, இலவச மின்சார பயனாளிகள் போக, மாதம் சராசரியாக, 1 கோடி - 1.15 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.ஆன்லைனில் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் மின் கட்டணத்தை செலுத்தலாம். இந்த முறையில் செலுத்துவதால் வரிசையில் காத்திருப்பது, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை எழுவதில்லை. அதனால், ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதன்படி, 2019 - 20ல் மொத்தம் 11.78 கோடி பேர் மின் கட்டணம் செலுத்தியதால், 40,547 கோடி ரூபாய் வசூலானது. இதில் மின் கட்டண மையங்களில், 8 கோடி பேர், 22,100 கோடி ரூபாயும்; ஆன்லைனில், 3.75 கோடி பேர், 18,448 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளனர். 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஆன்லைன் வாயிலாக மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 - 25ல் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியோர் எண்ணிக்கை, 9.56 கோடியாகவும்; வசூலான தொகை, 58,285 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே ஆண்டில், மின் கட்டண மையங்களில், 4.18 கோடி பேர், 10,408 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து, மின் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மின் கட்டணம் செலுத்துவோரில், 70 சதவீதம் பேர் இந்த வசதியை பயன்படுத்துவதால், மின் கட்டண வசூல் தொகையில், 85 சதவீதம் ஆன்லைன் வாயிலாக கிடைக்கிறது. இது விரைவில், 100 சதவீதமாக அதிகரிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

CHELLAKRISHNAN S
ஜூன் 19, 2025 13:39

this month I paid eb bill using sbi debit card. to my surprise, sbi ged rs.46 towards bank ges. when I contacted sbi, mylapore branch, they said as per rule they ged this. Using debit card attracts bank ges? I was shocked


சமீபத்திய செய்தி