சென்னை : மின்சார கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு, அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் அதிகரித்துள்ளன.வாகன கையிருப்பு, பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் விலை குறைவு, பசுமை சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் விதிமுறைகளின் அழுத்தம் போன்றவற்றின் காரணமாக, மின் வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது.டாடா, மஹிந்திரா உள்ளிட்ட கார் நிறுவனங்கள், ஏத்தர், விடா உள்ளிட்ட இரு சக்கர வாகன நிறுவனங்கள், மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இரு சக்கர வாகனங்களுக்கு, 10 முதல் 20 சதவீதம்; கார்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மின்சார இரு சக்கர வாகனங்களை, இ - வணிக நிறுவனமான, 'பிளிப்கார்ட்' வாயிலாக வாங்கினால், கூடுதலாக 5000 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. மின் வாகனங்களை ஊக்குவிக்க, வாகன நிறுவனங்கள், தங்களின் லாபத்தை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், டீலர்களும் சில சலுகைகளை வழங்குகின்றனர். அதாவது, வாகன பரிமாற்ற சலுகை, 15,000 ஆயிரம் ரூபாய் வரையும், டீலர் சலுகை 3000 முதல் 5000 ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது.தர ஆய்வு நிறுவனமான, 'இக்ரா' தரவுகளின்படி, 2021 - 22ம் ஆண்டின் மொத்த வாகன விற்பனையில், மின் வாகன பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அதே, நடப்பு நிதியாண்டில், அது 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும், 2030க்குள் இரு சக்கர மின்வாகன பங்கு, 25 சதவீதமாகவும், மின்சார பயணியர் கார் பங்கு 15 சதவீதமாகவும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.