உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி; தங்கம் விலை 53 சதவீதம் அதிகரிப்பு

இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி; தங்கம் விலை 53 சதவீதம் அதிகரிப்பு

கோவை: தங்கத்தின் விலை, நேற்று கோவையில் ஒரு கிராம் 9,795 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஜி.எஸ்.டி., தவிர்த்து, 78,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து பண்டிகைகள் வர இருப்பதால், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல்களுக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. 2024ல் ஜூலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் வாங்கும் திறன் மக்களிடம் குறைந்துள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: பிரிக்ஸ் நாடுகள் இணைந்து தங்கத்தை பிரதானமாக வைத்து வர்த்தகம் செய்ய சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், உலக நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகின்றன. இதன் காரணமாக, தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம். மத்திய நிதி அமைச்சரை, சென்னையில் சந்தித்து, டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே, உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த முடியுமென வலியுறுத்தினோம். 2024 ஆக., ஒரு கிராம் தங்கம் 6,390 ரூபாயாக இருந்தது. நேற்று முன்தின நிலவரப்படி, ஒரு கிராம் 9,805 ரூபாய்க்கு விற்கப்பட்டது. (ஜி.எஸ்.டி., தவிர்த்து ) தங்கத்தின் விலை, ஓராண்டில் 53.44 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உச்சம் தொட்டுள்ளதால், கல்யாண முகூர்த்தங்கள் இருந்தும் 40-50 சதவீதமே வர்த்தகம் நடந்துள்ளது. இத்துறைக்கு அரசு ஆக்கப்பூர்வமாக இறக்குமதி வரியை 6ல் இருந்து 2 சதவீதமாக ஆக குறைக்கவும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம். அமெரிக்கா இறக்குமதி வரி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர் பண்டிகை காலம் என்பதால், மேலும் விலை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
செப் 05, 2025 11:46

ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால்தான் ஏற்றுமதி அதிகரிக்கும். அனாவசியமாக தங்கம் பெட்ரோல் இறக்குமதி செய்து வாங்குவது குறைந்தால் அன்னியச் செலாவணி இருப்பு நன்றாக இருக்கும். இறக்குமதி ரசாயன உரங்களை பயன்படுத்தி நில வளம் நீர்வளத்தை வீணாக்கி பயிர் செய்து தானிய ஏற்றுமதி செய்வது அழிவில் விடும்.


Venkatesan.v
செப் 05, 2025 01:59

இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை, அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ... சொல்வது யார்???? நம் மத்திய நிதியமைச்சர்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 01:20

இந்திய நாணயத்தின் மதிப்பு பெரும் வீழ்ச்சி. எல்லா பெருமையும் ஜீக்கே சேரும். எவ்வளவு கஸ்டப்பட்டு மக்களை இங்கே கொண்டாந்து நிப்பாட்டி இருக்காரு.


Natarajan Ramanathan
செப் 05, 2025 01:17

தங்கம் விலை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரியும் வினோதமான காரணங்களை சொல்வார்கள். ஆனாலும் மு..ட்டாள் ஜனங்கள் வாங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரே ஒரு மாதம் யாருமே தங்கம் வாங்காமல் புறக்கணித்தால் தங்கம் விலை வீழ்ந்து விடும்.


Tamilan
செப் 05, 2025 00:35

இந்திய அரசின் நாணயம் தரம் தாழ்ந்துவிட்டதன் எதிரொலிதான் அனைத்திற்கும் காரணம் .


raja
செப் 05, 2025 05:21

கூமுட்டைகளுக்கு தெரியாது நாணயத்தின் மதிப்பு வீழ்தால் வெளிநாட்டில் இருந்து வரும் அந்நிய செலவாணி அதிகரிக்கும் என்று முக்கியமாக தங்கள் வீட்டிற்க்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு மிகுந்த லாபம் என்று....


அப்பாவி
செப் 05, 2025 17:07

இந்திய ஏற்றுமதிக்கு குறைந்த விலையும், இந்திய இறக்குமதிக்கு அதிக விலையும் குடுக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை