உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 471 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சேவை

471 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சேவை

சென்னை: ''தமிழகத்தில் பிரசவம் பார்க்கப்படும், 471 ஆரம்ப சுகாதார நிலையங்களில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு சேவைக்கான, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், குழந்தை நலத்திட்டங்கள் மற்றும் மாநில அளவிலான குடும்ப நல சாதனை விருதுகளை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று வழங்கினர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதங்களை குறைத்திடும் வகையில், அதிகமாக பிரசவம் நடக்கும், 471 ஆரம்ப சுகாதார நிலையங்களில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு சேவை துவங்கப்பட்டு, அதற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.சென்னையில், திருவொற்றியூர், மாதவரம், வளசரவாக்கம், அம்பத்துார், ஆலந்துார், புளியந்தோப்பு ஆகிய இடங்களில் ஏற்கனவே உள்ள மையங்கள் புதுப்பிக்கப்படும். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவு, சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவாக தரம் உயர்த்தப்படும்.இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையால், 1,000 குழந்தைகளுக்கு, 13 ஆக இருந்த இறப்பு விகிதம், 8 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வளரிளம் பருவ கர்ப்பத்தை தவிர்ப்பதற்கும், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் விரிவான செயல் திட்டம் வகுக்கப்படும்.ஆட்டிசம் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறியும், தொடக்க நிலை இடையீட்டு மையங்கள், தென்காசி, மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் துவங்கப்படும். மேலும், 14 வயதை கடந்த சிறுமியருக்கு, கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் பணி, 36 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை

நிரப்பக்கோரி 27 முதல் போராட்டம் தமிழகத்தில், 100 சதவீதம் காலியாக உள்ள, 1,066 சுகாதார ஆய்வாளர் நிலை - 2 பணியிடங்களை நிரப்பக்கோரி, வரும், 27 முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அதன் ஒருங்கிணைப்பாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:பொது சுகாதாரத்துறையில், துணை சுகாதார நிலைய அளவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் நிலை - 2 பணியிடங்கள், 100 சதவீதம் காலியாக உள்ளன. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை, 2023ல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இருந்த குறைபாடுகள், நீதிமன்ற வழக்குகள் போன்றவை காரணமாக, இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இவற்றால், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பெரிய சவாலாக மாறியுள்ளது.எனவே, சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி, வரும் 27ம் தேதி முதல், மாவட்ட தலைநகரங்களில், மாலை நேரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். ஏப்., 9ம் தேதி, சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
மார் 23, 2025 13:10

பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர், செவிலியர், பணியாளர் சரியாக இல்லை, வருவதும் இல்லை என பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறோம். இதற்கு முதலில் என்ன தீர்வு?


Kasimani Baskaran
மார் 23, 2025 06:25

விஞ்ஞானத்தை வைத்து அள்ளலாம் என்று முடிவு செய்து விட்டது போல தெரிகிறது. நுட்பமாக கவனித்தால் எளிதில் கூட்டமாக பிடிக்கலாம்.


முக்கிய வீடியோ