உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு வாரங்களுக்கு மேல் நீடித்தால் இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இரு வாரங்களுக்கு மேல் நீடித்தால் இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பரவும் காய்ச்சல் குறித்து பகுப்பாய்வு செய்ததில், 75.4 சதவீதம், 'இன்ப்ளூயன்ஸா' வகையை சார்ந்தது என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இரண்டு வாரத்திற்கு மேல் உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது, எந்த வகையான வைரஸ் என்பது குறித்த ஆய்வை, பொது சுகாதாரத்துறை மேற்கொண்டது. மாநிலம் முழுதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 326 பேரின் சளி மாதிரிகளை சேகரித்து, 11 வகையான வைரஸ் பாதிப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் வீரியம் மற்றும் பாதிப்பு பெரியளவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வகை பாதிப்புகள், 75.4 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், இன்ப்ளூயன்ஸா ஏ வகை பாதிப்பால், 44 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல, ஆர்.எஸ்.வி.வி., என்ற நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு, 9 சதவீதம் பேருக்கு உள்ளது. மேலும், 15.6 சதவீதம் பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், இன்ப்ளூன்ஸா வகையில் பெரியளவில் பாதிப்பு இல்லையென்றாலும், உரிய சிகிச்சை பெறவில்லை என்றால், மற்ற டெங்கு, நிமோனியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, காய்ச்சல் பாதித்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியம். வரும் ஜனவரி வரை காய்ச்சல் பாதிப்பு, இதே அளவில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ