சென்னை: வீட்டுமனை அங்கீகாரம் தொடர்பாக, உரிய தகவல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, சித்தேரி நீர்ப்பாசனப் பகுதியில், விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பான கோப்புகள், அலுவலக குறிப்புகளின் பிரதிகள் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரத்தின பாண்டியன் என்பவர், 2019ல் மனு தாக்கல் செய்தார்.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக, பொது தகவல் அலுவலர்கள், அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், மாநில தகவல் ஆணையத்தில், அதே ஆண்டில் இரண்டாவது மேல் முறையீடு செய்தார்.இதை விசாரித்த தகவல் ஆணையம், மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்க உத்தரவிட்டது.ஆனால், சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள், சம்பந்தம் இல்லாத விபரங்களை கொடுத்துவிட்டு, தகவல் அளிக்கப்பட்டதாக ஆணையத்துக்கு தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக, ரத்தின பாண்டியன் மீண்டும் ஆணையத்தில் முறையிட்டார்.இதை விசாரித்த தகவல் ஆணையம், அப்போதைய பொது தகவல் அலுவலர்கள் நாராயணன், மகாராணி, முதலாவது மேல் முறையீட்டு அலுவலரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு, தலா, 10.000 ரூபாய் அபராதம் விதித்து, 2021ல் உத்தரவிட்டது. இதுவும் அமலுக்கு வரவில்லை.இது குறித்து, தகவல் ஆணையர் மா.செல்வராஜ் சமீபத்தில் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கோரிய தகவல்களுக்கு, சம்பந்தம் இல்லாத பதில்களை அளித்துள்ளது தெரிகிறது. ஆணையத்தின் முந்தய உத்தரவுகளில் கேள்வி எழுப்பிய நிலையில், கோப்புகள் காணவில்லை என, கலெக்டர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதில் பொது தகவல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை நில நிர்வாக ஆணையர் விசாரிக்க பரிந்துரை செய்கிறோம்.நான்கு ஆண்டுகளுக்கு மேல் உரிய தகவல் அளிக்காமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.