3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி
சென்னை:சென்னை ஓபன் எனப்படும், 'டபிள்யு.டி.ஏ., 250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி டென்னிஸ் திடலில், அக்டோபர், 27 முதல் நவம்பர், 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, பரிசுத் தொகையாக, 31 லட்சத்து 58,100 ரூபாய் வழங்கப்பட உள்ளது.உலக மகளிர் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து, இப்போட்டியை நடத்துகின்றன. இதுகுறித்து, துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி:இந்தியாவில் புகழ்பெற்ற, டென்னிஸ் தொடர்களில் ஒன்றான, சர்வதேச டென்னிஸ் போட்டியான, 'சென்னை ஓபன் -2025' சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நமக்கு மிக முக்கியமான ஆண்டு. ஏனெனில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். இந்த போட்டிக்காக, முதல்வர் ஸ்டாலின், 12 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அத்துடன் நடப்பு ஆண்டில், ஆசிய சர்பிங், உலகக் கோப்பை ஹாக்கியும் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.