ஓ.பி.எஸ்., மீண்டும் இணைவது குறித்து காலம் பதில் சொல்லும் பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் பேட்டி
அவனியாபுரம்: ''முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் எடுத்த முடிவு இனிமையானதாக இல்லை. அவர் எப்போதுமே தி.மு.க.,வுக்கு எதிராகவே பேசியிருக்கிறார். அவர் மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும்,'' என, மதுரையில் பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். தென் மாவட்டங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி என்கின்றனர். அதில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. கொலைகள், போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சி அமைச்சர்கள், தலைவர்கள் வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளியில் இருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசுகிறார். முன்னாள் மத்தியமைச்சர்கள் மனோகர் பாரிகர், அருண் ஜெட்லி குறித்து அவர் பேசியது கண்டனத்திற்குரியது. செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக ஆப்பரேஷன் சிந்துார் குறித்து பேசி வீரர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்துகிறார். மத்தியமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று சொல்லி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் உட்பட அனைவரும் தங்கள் முடிவை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. ஆனால் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள்தான் முடிவு செய்வர் என்றார். மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சகாதேவன் உடனிருந்தனர்.