வில்லங்க சான்றிதழ் பெற எட்டு நாட்கள் காத்திருப்பு பொதுமக்கள் புகாரால் விசாரணை
சென்னை:சொத்து தொடர்பாக, 'ஆன்லைன்' முறையில் வில்லங்க சான்றிதழ்கள் அனுப்ப, எட்டு நாட்கள் வரை தாமதமாவதாக, எழுந்துள்ள புகார்கள் குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது, தாமதப்படுத்தும் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பதிவு விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியம். இதற்காக சொத்து வாங்குவோர், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழை பெற்று வந்தனர். பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறிய பின், வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையும் மாற்றப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் முறையில், உரிய விபரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்தினால் போதும். அடுத்த மூன்று நாட்களுக்குள், வில்லங்க சான்றிதழ், விண்ணப்பதாரரின், 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தால், பெரும்பாலான அலுவலகங்களில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வில்லங்க சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. ஆவண எழுத்தர்கள் வாயிலாக விண்ணப்பித்தால் மட்டுமே, குறித்த காலத்தில் வில்லங்க சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு, பொதுமக்கள் புகார்கள் அனுப்பி வருகின்றனர். அதனடிப்படையில், உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது, சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்திய அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதிவு மாவட்டம் மற்றும் சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக, ஆன்லைன் முறையில் வில்லங்க சான்றுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட சான்றுகள் குறித்த, புள்ளி விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு விண்ணப்பமும், சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்களால் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் ஆய்வு செய்யப்பட்டது. சில இடங்களில், இரண்டு நாட்களில் வில்லங்க சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில், ஆறு முதல் எட்டு நாட்கள் வரையாகிறது.கணினி தகவல் தொகுப்பில் இருக்கும் விபரங்களை எடுத்து, உரிய விண்ணப்பதாரருக்கு அனுப்ப, எட்டு நாட்களாவது ஏன் என, சார் - பதிவாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள், அனைத்து விண்ணப்பங்களையும் முடிக்க, புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.