உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஆர்.சி.டி.சி.,யில் போலி கணக்கு நீக்கத்தில் உண்மையான ரயில் பயணியரும் பாதிப்பு

ஐ.ஆர்.சி.டி.சி.,யில் போலி கணக்கு நீக்கத்தில் உண்மையான ரயில் பயணியரும் பாதிப்பு

சென்னை: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கப்பட்ட விவகாரத்தில், உண்மையான பயணியரின் முகவரிகளும் முடக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. அதை பயன்படுத்துவதற்கு, இந்த இணையதளத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்து, கணக்கு துவங்க வேண்டும். அந்த ஐ.டி., மற்றும் கணக்கை பயன்படுத்தி தான், முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, மொத்த பயணியரில் 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு துவங்கும் நாளில், 10 நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், டிக்கெட் எடுக்க முடியாமல் பயணியர் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு

மேலும், தட்கல் முன்பதிவு முறையிலும் முறைகேடு நடக்கிறது. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த புகார்கள் அடிப்படையில், 2.5 கோடி போலி கணக்குகளை இணையதளத்தில் இருந்து, ஐ.ஆர்.சி.டி.சி., கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நீக்கியது.இதில், உண்மையான பயனாளர்களின் கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால், அவர்களால் 'ஆன்லைன்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ரயில் பயணியர் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தடுக்க, போலி கணக்குகளை நீக்குவதை வரவேற்கிறோம். ஆனால், எங்களை போன்ற உண்மையான பயனாளர்களின் கணக்குகளை முடக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐ.ஆர்.சி.டி.சி., - ஐ.டி., பயன்படுத்தி வருகிறோம். தற்போது, திடீரென முடக்கி இருப்பது ஏன் என தெரியவில்லை. இதற்கான காரணத்தையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அலுவலகத்துக்கு இ -மெயில் அனுப்பி உள்ளோம்; இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. புதிய ஐ.டி.,யை துவக்கினாலும், ஏற்கனவே உங்களது பெயரில் கணக்கு இருப்பதாக காட்டுகிறது.

அனுமதி வேண்டும்

இதனால், நாங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை போன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரயில்வே நிர்வாகம் தலையிட்டு, எங்களை போன்ற உண்மையான பயணியரின் ஐ.டி.,களை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இந்த புகார்களை டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்துஉள்ளோம். இறுதி முடிவை ரயில்வே அறிவிக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramaraj P
ஜூன் 17, 2025 07:16

பலத்த அடி விழுந்து விட்டதோ -:)


அப்பாவி
ஜூன் 17, 2025 06:30

ஒருத்தன் திருடன்னா, இன்னொருத்தன் தத்தி. ஏதோ திடுதிப்புனு கணக்கை முடக்கிட்டா திருடனை ஒழிச்ச மாதிரி நினைப்பு.


ஜான் குணசேகரன்
ஜூன் 17, 2025 04:25

IRCTC app மிகவும் கேவலமான செயலி என்பது அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கருத்து. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத படி எல்லா இடங்களிலும் விதவிதமான விளம்பரங்களை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் எரிச்சல் அடையும் விதமாக இருக்கும். எளிதாக பணம் செலுத்த முடியாது. பலவிதமான கடன் செயலிகள் வைக்கப்பட்டுள்ளது. ஏஜெண்ட்கள் மட்டுமே பயன்னடைய உருவாக்கி உள்ளார்கள்.


அப்பாவி
ஜூன் 17, 2025 07:53

ஜான் சொல்வது 100 சதவீதம் உண்மை. காசுக்காக எல்லாதில்லாலங்கடி வேலையும் செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி


Kasimani Baskaran
ஜூன் 17, 2025 03:37

ஐடி சேவை வழங்குவோர் ஒரு வேளை இட ஒதுக்கீட்டில் வந்தவர்களோ என்ற சந்தேகம் வருகிறது.. ஆதார் அட்டையுடன் இணைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை