உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது

இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது

சென்னை: ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி இரிடியத்தில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் கிடைக்கும் என மோசடி செய்த வழக்கில் மேலும், 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. 'இந்த இரிடியத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும்' என, தமிழகம் முழுதும், 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதற்காக மோசடி கும்பல்கள், ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக அறக்கட்டளைகளை துவங்கி உள்ளனர். இந்த அறக்கட்டளைகள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்தால், அரசுக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை என்பதால், அதன் வாயிலாக மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழக காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பண மோசடி குறித்து, 19க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சிக்கிய நபர்கள் தொடர்பாக, செப்., 12ல், தமிழகத்தில் 43, வெளி மாநிலங்களில் நான்கு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இரிடியம் முதலீடு மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன், வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஜெயராஜ் உட்பட, 30 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், இரிடியம் முதலீடு தொடர்பாக, 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதை உறுதி செய்ய, முக்கிய புள்ளியான சாமிநாதனை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின்படி, மேலும், 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை, சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 54 பேர் கைதாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sekar
அக் 02, 2025 15:42

அனைவருக்கும் கடுமையான தண்டனையும் பணம் மற்றும் சொத்துக்களையும் நாட்டுடமையாக்க வேண்டும்.


Sekar
அக் 02, 2025 15:41

உடனே தண்டனை கொடுக்க வேண்டும். மற்றும் அனைத்து பணத்தையும் , மற்றும் சொத்துக்களையும் முடக்கி நாட்டுமையாக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி