இரும்பு உருக்கு உலைகள்: புதுகை அருகே கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே ஆலங்குடி பெரியகுளம் கண்மாய் பகுதியில், இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் அருகே ஆலங்குடி பெரியகண்மாய் பகுதிகளில், பழமையான இரும்பு உருக்கு உலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இரும்பு உலை எச்சங்கள், பெரும்பாலும் தொன்மையான நீத்தார் நினைவுச் சின்னங்களை ஒட்டியே கிடைத்துள்ளன. இந்த ஈமச்சின்னங்களை மட்டும் வைத்து, உலைகளின் காலத்தை கணக்கிட முடியாது. ஏனெனில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நுாற்றாண்டு வரை, உள்ளூர் இரும்பு உலைகள் செயல்பட்டு வந்துள்ளன. முறையான ஆய்வுகள் மூலமே காலத்தை கணக்கிட வேண்டும். அதற்கு முதலில் இதுபோன்ற தொல்லியல் எச்சங்கள் காக்கப்பட வேண்டும். இதுகுறித்து வரலாற்று ஆர்வலரும், பேராசிரியருமான முத்தழகன் கூறியதாவது: ராயவரத்தில் உள்ள ஆலங்குடி பெரியகண்மாய் மேற்பரப்பு பகுதியில், களஆய்வு மேற்கொண்டதில், உருகிய நிலையில் தாது கற்கள், இரும்பு கசடுகள், சுடுமண் துருத்தி குழாய்களின் உடைந்த பாகங்கள், பழமையான பானை ஓடுகள் போன்றவை கிடைத்தன. இங்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் செயல்பட்டிருக்க வேண்டும். அதற்குச் சான்றாக இந்தக் குவியல்கள் ஒரு பெரிய மேடாக அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவரங்குளம், பொற்பனைக்கோட்டை, பெருங்களுர், விளாப்பட்டி, பொன்னம்பட்டி என பல்வேறு ஊர்களில், இதுபோன்ற பழமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து, இப்பகுதியில் இரும்புத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அருகாமையில் கிடைக்கக்கூடிய செம்புரான் கற்கள் போன்ற தாதுக்களை, உயர் வெப்பநிலையில் உருக்கி தயாரிக்கும் தொழில் நுட்பங்களை கொண்டு, இந்த உலைகளில் இரும்புப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உருக்கு உலைகளின் காலத்தை முறையான அறிவியல் ஆய்வுகள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.