உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?

புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க, தனித்து இயங்குமாறு அன்புமணி தரப்பிடம் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, புது கட்சித் துவங்கும் முடிவுக்கு அன்புமணி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடும் வருத்தம்

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ம.க.,வை நிறுவிய ராமதாசுக்கும் அவரது மகனுக்கும் இடையே சரிசெய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உக்கிரமடைந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் விரும்பினார். அதற்காக அ.தி.மு.க.,விடம் பேசி முடிக்கப்பட்ட நிலையில் அப்போதைய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முயற்சியில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வை இடம்பெற வைத்தார் அன்புமணி.இதனால், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணிஇரண்டுமே தோல்வியடைந்தன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தி.மு.க., கூட்டணி பெரு வெற்றி பெற்றது. தருமபுரியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவும் தோல்வி அடைந்தார். வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதியிலேயே பா.ம.க., வெற்றி பெற முடியாதது, ராமதாசுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது.'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், தருமபுரியில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்' என தேர்தலுக்குப் பின் சொல்லத் துவங்கிய ராமதாஸ், அன்புமணி மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் கோபப்படத் துவங்கினார்.

விமர்சனம்

கூடவே, தன் குடும்பத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாத ராமதாஸ், சவுமியாவின் அரசியல் நுழைவு குறித்தும் எரிச்சலில் இருந்தார். இப்படி பல பிரச்னைகள், அப்பா - மகனான, ராமதாஸ் - அன்புமணி இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்த, அன்புமணி விருப்பத்தை மீறி, தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் ஆக்கினார் ராமதாஸ்.இது அன்புமணிக்கு கோபத்தை ஏற்படுத்த, ராமதாசுக்கு எதிராக கொந்தளித்து ஆவேசப்பட்டார். இரு தரப்புக்கும் இடையே மோதல் பெரிதாக, ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சிக்கத் துவங்கினர். 'ராமதாஸ், 5 வயது குழந்தை மனநிலையில், எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார்' என அன்புமணி விமர்சிக்க, 'அன்புமணி இனிமேல் என் பெயரையே பயன்படுத்தக் கூடாது' என, ராமதாஸ் உத்தரவு போடுவது வரை மோதல் சீரியஸானது.

தீவிர ஆலோசனை

இதற்கிடையே, 'கட்சி என்னுடையது தான்' என்று சொல்லி, கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய ராமதாஸ், விரைவில், மகளிர் மாநாடு நடத்தி முடித்த பின், பா.ம.க., பொதுக்குழுவையும் கூட்டும் முடிவுக்கு வந்திருக்கிறார். 'பொதுக்குழு வாயிலாக, 'அன்புமணி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்' எனச் சொல்லி, அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் தைலாபுரத்தில் தீவிர ஆலோசனை நடக்கிறது.இதையடுத்து, 'அப்பாவோடு தொடர்ந்து மல்லுக்கட்டுவது சரியாக இருக்காது' என முடிவெடுத்திருக்கும் அன்புமணி, தனிக்கட்சியாக செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்து உள்ளார். 'அகில இந்திய பாட்டாளி மக்கள் கட்சி' என பெயர் வைத்து, தனித்து இயங்கலாம் என சிலர் கொடுத்த யோசனையையும், அன்புமணி தீவிரமாக பரிசீலித்து வருகிறார்; சட்ட ரீதியான ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.பா.ம.க.,வின் கட்சி அடிப்படை விதிகள், அன்புமணி தரப்புக்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் சட்டசபைத் தேர்தல் வருவதால், மோதல் போக்கை தொடராமல், ஒதுங்கிச்செல்ல அன்புமணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஜூலை 13, 2025 20:07

பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைப்பார்..வேறு என்ன? வன்னிய மக்களை வைத்து அப்பனும் புள்ளையும் நன்றாக கல்லா கட்டுகிறார்கள்..


sankaranarayanan
ஜூலை 13, 2025 17:30

நல்ல முடிவு சீக்கிரமே செய்து முடியுங்கள் உங்களுக்குத்தான் கட்சியில் அதகிக்க செல்வாக்கு உள்ளது


V RAMASWAMY
ஜூலை 13, 2025 12:07

குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசியல் கட்சிகள் கட்டுப்பாடு என்றொரு சட்டம் வந்தால் கூட தேவலை. குடும்பத்திற்கொரு கட்சி, தெருவுக்கொரு கட்சி என்று எங்கு பார்த்தாலும் கொடிக்கம்பங்கள், எல்லோரும் அரசியல்வாதிகள், எல்லோரும் கட் டை ப்ஞ்சாயது நததுபவர்கள் என்று குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறது நாடு. தாங்க முடியவில்லை, ஐயகோ, சீக்கிரம் 2026ல் நல்ல முடிவு வரட்டும்.


Jack
ஜூலை 13, 2025 11:15

என்னமோ ஒரு திட்டத்தோடு அப்பாவும் மகனும் டிராமா போடறாங்க ...


Oviya Vijay
ஜூலை 13, 2025 10:33

என்னாஆ மேன் நீ... இம்மாம் பெரிய மாநாடு நடத்த தெரிஞ்ச ஒனக்கு ஒன்னோட நைனாவ கரெக்ட் பண்ண தெரியலையே ராசா... உன்னோட நைனா எம்புட்டு அனுபவசாலி... அவர கம்பேர் பண்றப்போ நீயெல்லாம் ஒரு பச்சா... அதாவது இன்னமும் நீ ஒரு கத்துக்குட்டின்னேன்... புதுசா கட்சி ஆரம்பிச்சாலும் ஒரு யூஸும் இல்லை... ஏன்னா ஏற்கனவே கட்சி கலகலன்னு இருக்கு... ஒமக்கும் உங்க அப்பனுக்கும் நடக்குற சண்டையில என்னைக்கோ தொண்டர்கள் மனம் மாறிப் போயாச்சு... நீங்க சண்டை போட்டுக்கிட்டே இருங்க... நாங்க எங்க இஷ்டத்துக்கு ஓட்டு போட்டுக்கிறோம் அப்படின்னு உங்களக் கொஞ்சம் கூட கேர் பண்றதேயில்ல... நீங்க போடுற சண்டையில உண்மையான ஆதாயம் யாருக்கு தெரியுமோ... திமுகவுக்கும் தவெகவுக்கும் தான்... எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் பாரு லவ்பெல்... ஒம்மோட ரெண்டு கண்ணும் குளமா இருக்கப் போவுது...


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 09:25

அன்புமணி புதுக்கட்சி தொடங்கினால் தமிழகத்தில் போனியாக வாய்ப்பில்லை. வரவர இந்த மேங்கோ பாய்ஸ்களின் காமெடி எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.


Arjun
ஜூலை 13, 2025 11:57

கொத்தடீமைகளின் கதறல்


முக்கிய வீடியோ