காற்றாலை மின்சாரத்தை வீணடிக்கிறதா வாரியம்?
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், சொந்த பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு விற்கவும், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 9,331 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 8 முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. நடப்பு சீசனில், இம்மாதமே அதிக மின்சாரம் கிடைக்கிறது. நேற்று முன்தினம், 10.39 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில், இதுவே காற்றாலைகளில் கிடைத்த அதிக மின்சாரம். கடந்த 2024 ஜூலை, 9ல், 12.02 கோடி யூனிட் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலைகளில் கிடைத்த உச்ச அளவாக உள்ளது. இது குறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது: கடந்த ஆண்டில் மே மாதம் ஒரு நாளில் மட்டும், அதாவது அம்மாதம், 27ம் தேதி 10.27 கோடி யூனிட் கிடைத்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக இம்மாதம், 27ல் 10.11 கோடி யூனிட், 28ல், 10.39 கோடி யூனிட் என, தொடர்ந்து இரு நாட்களுக்கு, 10 கோடி யூனிட் மேல் மின்சாரம் கிடைத்துள்ளது. காற்றாலைகளில் அடுத்த நாள் எவ்வளவு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது, 108 கோடி யூனிட்கள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்தாமல், மின் வாரியம் வீணடிக்கிறது. எனவே, குறைந்த விலையில் மற்றும் இயற்கையில் கிடைக்கும் மின்சாரத்தை, மின் வாரியம் முழுதுமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.